பல இடங்களில் நீண்ட வரிசை : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.


பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.


எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், எதிர்காலத்தில் பெற்றோலிய விநியோகஸ்தர்களுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த (தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று  பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த கட்டத்தில், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த சுட்டிக்காட்டியுள்ளார்