ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைப்பு - மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சட்டமூலத்தை இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான முன்மொழிவு நாளை அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 0 முதல் 30க்கும் இடைப்பட்ட அலகொன்றுக்கான கட்டணம் 2 ரூபாயினால் குறைக்கப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக அந்த கட்டணம் குறைக்கப்படவுள்ளதுடன் 31 முதல் 60 வரையான அலகொன்றுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக 11 ரூபாவால் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் 61 முதல் 90க்கு இடைப்பட்ட அலகொன்றுக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாக 12 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

91 முதல் 120 வரையான அலகொன்றுக்கான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 20 ரூபாவினால் குறைப்பதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்து சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் அவர்களது விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் மின்சார சபை ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.