எரிபொருள் இறக்குமதியில் மோசடி! திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்


இலங்கை அரசாங்கம் பிற நாடுகளில் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வதில் மோசடி செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவது போல் நடித்து, துபாயில் உள்ள நிறுவனம் மூலம் தரம் குறைந்த கச்சா எண்ணெய்யினை கொள்வனவு செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் நடக்கும் மிகப்பெரிய மோசடி எரிபொருள் கொள்வனவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், நேரடியாக ரஷ்ய நிறுவனத்திடம் எண்ணெய் வாங்கவில்லை. விநியோகம் மட்டும்தான் அந்த நிறுவனம் செய்கிறது.

துபாயில் அமைந்துள்ள கொரல் எனர்ஜி என்ற நிறுவனத்தின் ஊடாகத்தான் எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்ய யுரல் கச்சா எண்ணெய் பேரலுக்கு 35 முதல் 50 டொலர் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றை 117க்கு எப்படி வாங்க முடியும்? இந்த கொள்முதலை பின்பற்றியது யார்? இதனை நடைமுறை செய்ய ஒப்புதல் அளித்தது யார்? டெண்டர் அழைப்பு எப்படி நடந்தது? இவைதான் கேள்விகள் இதைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் கோப் குழுக்களிலும் இது பற்றி கேள்விகளை எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.