இலகு விசா நடைமுறையில் மோசடி..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


மத்துகம பிரதேசத்தில் வாட்ஸ் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி விசா தயாரித்து சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி மாகஸ்வத்தை, யட்டியன, அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அனைத்து பயணப்பொதிகளையும் எடுத்துக்கொண்டு வெளியூர் செல்வதற்காக மத்துகம பிரதேசத்திற்கு வருமாறு கூறி 60,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அகலவத்தை மற்றும் பதுரலிய பிரதேசங்களில் சந்தேகநபரால் இவ்வாறான பண மோசடிகள் மற்றும் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்று ஏனைய பிரதேசங்களிலும் பண மோசடிகள் மற்றும் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இலகுவாக விசா வழங்குவதாக யாராவது கூறினால் நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.