ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்



உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024ஆம் ஆண்டிற்கான 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனிடையே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இந்திய அணியின் முன்னணி வீரர்களைப் போல பல வெளிநாட்டு வீரர்களும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருவது ஒவ்வொரு அணிகளுக்கும் மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 வீரர்களில் நால்வர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரை தவறவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி, துஷ்மந்த சமிர, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுசங்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இழக்க நேரிடும் என அறியவருகின்றது.

இதில் குறிப்பாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிறைவடைந்த ஓரிரு நாட்களில் ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளதால் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மற்றும் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாத வீரர்களை இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்காமல் இருக்க இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


எவ்வாறாயினும், இம்முறை ஐபிஎல் தொடரில் இலங்கையில் இருந்து மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும், நுவன் துஷார மும்கை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.