கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : நச்சு வாயு காரணமா?



கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 வயது ஜெர்மன் பெண்ணும் நேற்று உயிரிழந்துள்ளார்.

அதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரித்தானிய பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த மரணமும் நிகழ்ந்துள்ளது.

நச்சு வாயுவை உள்ளிழுத்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் வீதியில் உள்ள விடுதியொன்றுக்குக் கடந்த 30 ஆம் திகதி மூன்று வெளிநாட்டவர்கள் வந்து தங்கியுள்ளனர்.

அவர்களில் 30 வயதுடைய ஜேர்மன் பிரஜை ஒருவரும், 27 வயதுடைய அவரது மனைவியும் 24 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரும் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டவர்கள் மூவரும் அந்த விடுதியின் 3வது மாடியில் உள்ள அறையொன்றில் தங்கியிருந்தபோது, கடந்த 31 ஆம் திகதி அவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நிலை மோசமடைந்தமையினால் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், குறித்த பிரித்தானிய பெண் உயிரிழந்தார்.

சிகிச்சை பெற்றுவரும் ஜேர்மனிய பெண்ணின் நிலைமையும் மோசமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த அறைக்குக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குறித்த அறைக்கு சீல் வைத்தனர்.

அந்த அறைக்குப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒருவகையான வாயு விசிறப்பட்டிருந்தது.

குறித்த வாயுவைப் பயன்படுத்திய பிறகு, அந்த அறை 72 மணி நேரம் மூடப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, உரியவாறு விடுதி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், குறித்த மூன்று வெளிநாட்டவர்களும் அந்த வாயுவை சுவாசித்ததன் விளைவாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தொடர்புடைய விடுதியில் தங்கியிருந்த 18 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜெர்மன் பெண்ணும் நேற்று உயிரிழந்துள்ளார்.