இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா ஆகிய குடும்பமே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.

குறித்த குடும்பமானது நேற்று (1) நள்ளிரவு யாழ்ப்பாணம் -நெடுந்தீவு கடற்கரையில் இருந்து புறப்பட்டு இன்று (02) அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த ஐந்து இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டுள்ளார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.