கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை-மீனவ சங்கம் தெரிவிப்பு!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்ட ஈட்டையோ பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் இருந்து கடந்த மாதம் 29ம் திகதி மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் இதுதொடர்பாக அறிவித்துள்ள போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது, மீனவ சங்கங்கள் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளன.இதனிடையே, காணாமல் போன நான்கு மீனவர்களை தேடும் நடவடிக்கையில் மீன்பிடி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை, இந்திய கரையோர காவல்படை என்பன ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளதாக கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.