வடக்கில் நிதி நிறுவனம் மோசடி... தமிழர்களின் நகைக்கு ஏற்பட்டுள்ள நிலை!

வடக்கில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் மோசடியினால் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட நகைகளை மீட்க முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பியான எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று மிகவும் மோசடியான முறையில் மக்களிடம் பணம் அறிவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்திடம் தனது நகை ஒன்றை 100,001 ரூபாவிற்கு ஒருவர் அடகு வைத்தார். அந்தப்பணத்தில் அவர் 76000 ரூபாவை செலுத்திவிட்டார். மிகுதிப்பணமாக 24001 ரூபா செலுத்த வேண்டும்.

ஆனால் அந்த நிதி நிறுவனம் குறித்த நபர் இன்னும் 70400 ரூபா செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளது. இவ்வாறு பல பேரிடம் அந்த நிதி நிறுவனம் மோசடியான முறையில் பணத்தை அறவிடுகிறது.

இதனால் வடக்கில் தமிழ் மக்களினால் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதி கொண்ட நகைகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.