இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே ரபாவில் உக்கிர மோதல்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவிலும் உக்கிர மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கில் அல் சலாம் மற்றும் ஜினெய்னா பகுதிகளிலும் தென்கிழக்கு குடியிருப்பு பகுதிகளிலும் தமது படை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.

இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் மத்திய ரபாவை நோக்கி முன்னேற முயல்வதாகவும் ஆனால் ஹமாஸ் போராளிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு ரபாவில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த வாரம் ரபாவில் தரைவழி படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கொல்லப்பட்ட முதல் படை வீரர் இவர் என்று இஸ்ரேலிய அரச ஒலிபரப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரின் சப்ரா பகுதியில் உள்ள ஐ.நா. மருத்துவ மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான மருத்துவ மையங்கள் மீது இஸ்ரேல் இந்தப் போரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவ்வாறான 171 மையங்கள் சேதமடைந்திருப்பதாகவும் அதனை நடத்தும் ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமில் புரஷ் குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக அங்குள்ள அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜபலியா நகரில் அபூ அல் ஹசனி குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானம் நேற்று அதிகாலை வீசிய குண்டில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமாக வபா கூறியது.


கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.