பணம் பறிப்பதற்காக தனது மகள் கடத்தப்பட்டார் : தந்தை தகவல்


கண்டி கெலிஓயா - தவுலகல, ஹபுகஹயடதென்ன பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கம்பளை நீதவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும், நேற்று காலை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரையும் இன்று வரை தடுத்து வைக்குமாறு நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.
 
கடத்தப்பட்ட மாணவி அவரது தந்தையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார்.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர் நேற்று கம்பளை ஜெயமலாபுர பகுதியில் கைது செய்யப்பட்டார்.
 
அத்தடன், சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் அம்பாறையில் கைதான அதேவேளை, அவர்கள் பயணித்த வேனின் சாரதி கம்பளை - கஹடபிட்டிய பகுதியில் தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
 
இதனிடையே, தமது மகள் பணம் பறிக்கும் நோக்கத்திற்காகக் கடத்தப்பட்டதாகக் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.