பரம்பரையாக மேய்ச்சல் காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலை; பண்ணையாளர்கள் கவலை..!

பரம்பரையாக மேய்ச்சல் தரை காணியாக பயன்படுத்தி வந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால் பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிசார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.