நானுஓயாவில் சரிந்து வரும் கற்பாறைகள் : உயிர் அச்சத்தில் 47 பேர் இடம்பெயர்வு!

 
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா,  உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடும் மழையால் கற்பாறைகள் சரிந்து வருகின்றமையால் அவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கற்பாறையொன்று ஆட்டு தொழுவத்தில் விழுந்ததில் இரு ஆடுகள் உயிரிழந்துள்ளன. தொழுவமும் முற்றாக சேதமடைந்துள்ளது.

நானுஓயா உட்பட மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வருகின்றது.

தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில் நானுஓயா பகுதியில் மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து வீழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மழை காலங்களில் உயிர் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் சரிந்து விழுந்த கற்களும் ஆங்காங்கே ஆபத்தான நிலையில் தேங்கி நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

சம்பவம் தொடர்பாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக நுவரெலியா பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.