2021இன் மோசமான நிறுவனமாக மெடா (ஃபேஸ்புக்) தேர்வு!

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கியது. இளம்பெண்களின் நிலையை இன்ஸ்டாகிராம் மோசமாக்கியது ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. பயனாளிகளில் பாதுகாப்பு தொடர்பாக அந்நிறுவனம் மெத்தனமாக இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் குற்றம் சாட்டினார்.

உலகம் முழுவதும் இவற்றின் சேவைகளும் சில முறை முடங்கியது.  கடந்த அக்டோபர் மாதம் சேவை முடங்கியபோது, சில மணி நேரங்களில் பல்லாயிரம் கோடியை மார்க் சக்கர்பெர்க் இழந்திருந்தார்.  இதனிடையே, ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றியது. ஃபேஸ்புக்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் நிறுவனத்தின் பெயர் மெடா என மாற்றப்பட்டது.

இந்நிலையில், யாகூ ஃபினான்ஸ் இணையதளம், ’2021ம் ஆண்டின் மோசமான நிறுவனம்’ தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 1,541 பேர் வாக்களித்தினர். இதில்,  சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் 2ம் இடத்தை பிடித்தது.

அலிபாபாவை விட 50 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்று மிக மோசமான நிறுவனமாக ஃபேஸ்புக் முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு, மின்சார டிரக் ஸ்டார்ட்அப் நிகோலா மோசமான நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.

யாகூ ஃபைனான்ஸ் கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்கள், பேஸ்புக்கிற்கு எதிராக தணிக்கை புகார்கள் உட்பட பல குறைகளை கூறினர். மறுபுறம், சமூக ஊடக நிறுவனத்தால் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சிலர் புகார் தெரிவித்தனர். குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் அதன் புகைப்பட பகிர்வு தளமான Instagram இன் தாக்கம் குறித்து பதிலளித்தவர்களில் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

இருப்பினும், கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் பேஸ்புக் நிறுவனத்தால் தன்னை மீட்டெடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். மறுபுறம், 2021ம் ஆண்டின் சிறந்த நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.