கண்கள் பாதிப்படையும் : புத்தாண்டு கொண்டாடும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை


 பட்டாசு வெடிப்பதால்  கண்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என தேசிய கண் வைத்தியசாலை  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  

அத்துடன்  சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்க பண்டிகைக் காலங்களில் சிறுவர்கள் எப்போதும் பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும்,

தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பட்டாசு வெடிக்கும் போது தீ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறும்,

தீ காயங்களுக்கு கை மருந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் விற்பனை செய்யப்படும் பட்டாசு வகைகளின் தரத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் பட்டாசு வகைகளின் பொதிகளில் அவை பயன்படுத்தும் முறை, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கண் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் குசும் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அநேகமான பட்டாசு வகைகளின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கப் பொருட்கள் அவற்றில் உண்மையாக இருப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தர நிர்ணயசபை பட்டாசு வகைகள் தொடர்பிலான தரத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.