கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது.மேலும் மே இரண்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாரும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி இமாத் ஷா சுபைரிக்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர் ஆளுநராக இருந்த போது, 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும், ஆளுநராக இருந்த காலத்தில், மத்திய வங்கிக்குள் பதவிகளுக்கு தனது நெருங்கிய உறவினர்களை நியமித்ததன் மூலம் இரகசியத் தகவல்களை வெளியிட்டதன் மூலம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் இலங்கை அரசாங்கம் 10.04 பில்லியன் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவரை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இதனை பரிசீலித்த நீதவான், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.