பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தில் குழப்பம் : கல்வியமைச்சின் அதிரடி அறிவிப்பு

பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் தீர்மானத்தை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடனும் உரையாடினோம். அதன் விளைவாகவே பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமைச்சு இது குறித்து ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து ஒரு மாதிரி கால அட்டவணை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வெவ்வேறு கருத்துகள் வருவது பொதுவானதாகும் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு 7 ஆம் திகதி வரை கால அவகாசம்

எனினும் எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் பாடசாலை நேரத்தை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் முடிவை மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த முடிவை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.