அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள் : மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நிலை குறித்து தமது சில உறவினர்களால் கருத்து வெளியிடப்பட்டுள்ள பின்னணியில், பொதுஜன பெரமுனவால் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்மானங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என அவர் இன்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி பதவி நீக்கப்படவுள்ளதாக ராஜபக்சக்களின் உறவினரான உதயங்க வீரதுங்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், முன்னாள் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அதிபர் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது கூறியிருந்தார்.

இந்த பின்னணியில், பொதுஜன பெரமுனவின் அரசியல் தீர்மானங்களுக்கும் தமது குடும்பத்தினருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்கு எதிராகவும் மக்களை தவறான வழியில் நடத்தும் வகையிலும் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கட்சியின் அரசியல் தீர்மானங்கள் தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களால் அறிவிக்கப்படுமெனவும், அவை ஒருபோதும் குடும்ப உறுப்பினர்களால் அறிவிக்கப்படாதெனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உறவினர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு தாம் பொறுப்பேற்க போவதில்லை எனவும், அவர்களை நேர்காணலுக்கு அழைப்பது தவறான செயல் எனவும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் வரி அதிகரிப்பை பொதுஜன பெரமுன எதிர்ப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க தமது கட்சி உடனடி நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.