தமிழருக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்!

 


ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலக உயரதிகாரிகளுடன் தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்கள் இணையவழிச் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது, தற்போது நடைபெற்று வரும் தமிழினத்திற்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பிலும் முறையிடப்பட்டுள்ளன. 

அதேவேளை வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரிக்கும் வகையில் திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் எல்லை விஸ்தரிப்பு, சிங்களக் குடியேற்றங்களை நிறுவ கையகப்படுத்த முயற்சிக்கும் கோணேஸ்வரர் கோயில் காணி, மற்றும் அரசியல் கைதிகள் விடுதலையில் தாமதம், மீள் வழக்குத் தொடர்தல் என்பன தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டன.

அதன் போது, இணையவழி சந்திப்பின் ஏற்பாட்டாளர் சுரேந்திரனிடம் அதிகாரிகள் ஆதாரங்களைக் கோரியிருந்தனர். அதனையடுத்து தமிழ்த்தேசிய கட்சி தலைவர்களால் வழங்கப்பட்ட ஆதாரங்கள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலக உயரதிகாரிகளிடம் சுரேந்திரனால் கையளிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தலைவர்கள் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் , சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.