கொலன்னாவையில் வெள்ள நீர் வடிந்த பின்னரும் நிவாரணங்கள் இன்றி மக்கள் அவதி


நாட்டில் கடந்த ஒருவார காலமாக ஏற்பட்டிருந்த மழைக்கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றிவிட்டபோதும் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்கள் நிவாரணங்கள் இன்றி அல்லல்படுகின்றனர்.

தற்போதுமழை சற்று குறைந்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ள நீர்வடிந்தோடியும் சில தாழ் நிலப்பகுதியில் நீர் வழிந்தோடாமலும்காணப்படுகின்றது.


குறிப்பாக வெல்லம்பிட்டி கொலன்னாவப் பகுதியில் வெள்ள நீர் காரணமாக உறவினர் வீடுகளில் இருந்தவர்கள் தற்போது தமது வீடு திரும்பி துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. பெருமளவான


வீட்டுப்பாவனைப் பொருட்கள் நீரால் சேதமடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதுடன் அவற்றை மக்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்துகின்றனர்.

கொலன்னாவ பிரதச சபையின் சுத்திகரிப்பு ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் வாகனங்களில் அவற்றை ஏற்றி அவற்றை அப்புறப்படுத்துவதை அவதானிக்க முந்தது.

தமக்கு இதுவரை எந்த உதவிகளும் கிட்டவில்லை என்றும் தமது அவல நிலையப் போக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தமது பிள்ளைகளின் படிப்புபாதிப்புற்றுள்ளதாகவும் அவர்களின் கற்றல் உபகரணங்கள் அதிகளவில் அழிவடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேநேரம் நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில்சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


--