மீண்டும் உருவெடுக்கும் இனவாத மோதல் : பின்னணியில் செயற்படும் அரசியல்வாதிகள்


இலங்கையில் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்காக சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக அதிபரின் தொழிற்சங்க  தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய  தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக இலங்கை அரசியல் பொருளாதார ரீதியில் சரிவடைந்திருந்தாலும் தற்போது ஓரளவு முன்னேறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், இலங்கைக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தற்போது பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4வின் ஆவணப்பதிவு குறித்து நாடாளுமன்றுக்குள்ளும் வெளியிலும் பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பிலான சரியான விசாரணையை நடத்த அரசாங்கம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். 

எனினும், குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதிபரின் தலையீட்டின் கீழ் இது தொடர்பில் ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், சனல்4வின் ஆவணப்பதிவின் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ள போதும், எதிர்கட்சிகள் இது தொடர்பான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அரசியல் பிரச்சனைகளை தோற்றுவிக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் திலீபனின் நினைவுத் தின நிகழ்வுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதாகவும் சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார். 

இலங்கை பொருளாதார ரீதியில் சற்று தலையெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கு பாதகம் விளைவிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொள்ள கூடாது என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.