நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள்-ஜனாதிபதி ரணில்!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பல்வேறு துறைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.மேலும், திங்கட்கிழமை (25) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக பாடசாலை பேருந்துகள் மற்றும் வான்களுக்கான எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி, கடற்றொழில், சுற்றுலா, விவசாயம் மற்றும் பொது சேவை ஆகிய துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு டிப்போக்கள் மற்றும் முப்படை முகாம்கள் மூலம் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஜனாதிபதி விக்ரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

QR குறியீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்தல் மற்றும் நிதியளித்தல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.