இந்தியாவினை பகைத்தமையால் விளைவு - வரிசைகள் இருந்திருக்காது ரணில் ஆதங்கம்

முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“எமக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். இன்று எரிபொருள் எமக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்காக நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.

இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய இருக்கும் காரியங்களை இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.

IMF உதவிகளை பெற்று இம்மாதம் முடிவதற்கு முதல் உதவிகளை பெற்றுகொள்வோம். இலங்கையின் வரலாற்றின் படி மீண்டும் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியாளராக நாம் மாறுவோம். பொருளாதார பிரச்சினைகளினால் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன. ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது” என்றார்.