எல்ல- வெல்லவாய கோர விபத்து : வெளியாகிய அதிர்ச்சித் தகவல்கள்



எல்ல - வெல்லவாய விபத்தில் சிக்கிய பேருந்தின் பதிவை தேசிய போக்குவரத்து ஆணையம் 2023 ஆம் ஆண்டு பதிவு நீக்கம் செய்ததாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எனினும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க வீதி மேம்பாட்டு ஆணையகம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்ய மோட்டார் போக்குவரத்து ஆணையர் துறையின் குழு ஒன்று அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் வீதி பாதுகாப்பு திட்டத்துடன் இணைக்கப்பட்ட போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் எல்ல பகுதிக்குச் செல்லும் என்று பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

எல்ல பொலிஸ் பிரிவின் எல்ல-வெல்லவாய பிரதான சாலையில், தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, பிரதான வீதியின் 24வது கிலோமீட்டர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணி ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

 
நான் சாரதியின் அருகில் அமர்ந்து கதை;துக்கொண்டிருந்தேன். இதன்போது பிரேக் இல்லை என்று சாரதி கூறினார். இதன்போது நடத்துனரும்; நாங்களும்; சிரித்தோம். அங்கிருந்த ஒருவர் பொய் கூற வேண்டாம் என்று கூறினார். இரண்டாவது வளைவு வரும் போது உண்மைக்கும் பிரேக் இல்லை என்று மீண்டும் கூறி பேருந்தை திருப்ப முயற்சித்தார். இதன் பிறகே உண்மையிலும் பேருந்தில் பிரேக் இல்லை என்பதை அறிந்தோம். இதன்போது எதிர் திசையில் வாகனம் ஒன்று வந்ததது. அதில் மோதியே பேருந்து பள்ளத்தில் வீழ்ந்தது. எல்லாம் முடிந்து விட்டது என எண்ணினேன். சுய நினைவு வந்து கண்முழித்து பார்க்கும் போது நான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன். விபத்துக்குள்ளாகி ஒரு மணிநேரம் வரை எனக்கு சுய நினைவு இருக்கவில்லை. ஒரு சிறு பிள்ளை அழும் சத்தத்தை கேட்டே எழுந்தேன். உடனே அந்த சிறுபிள்ளையை கையில் ஏந்தி எழுந்திட முயற்சித்தேன். இருப்பினும் என்னால் முடியாமல் போய்விட்டது. இதன் பிறக்கு உதவிக்கு வருமாறு சத்தமிட்டேன் என்றார்