பொருளாதார நெருக்கடி-சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.அதன் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என தெரிவிக்கப்படுகின்றது. பேச்சுவார்த்தைக்கு சீனா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் அடுத்த சில நாட்களில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.இருப்பினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியான ஏற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் வரை சீனா காத்திருக்கும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், சீனா வழங்கிய 1.5 பில்லியன் டொலர் பரிமாற்றத்தின் நிபந்தனைகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கை அரசாங்கம் தயாராகியுள்ளது.இதேவேளை இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கடந்த வாரம் கொழும்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், சீனத் தூதுவரை சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார்.இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஜூலி சுங், பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு உதவுவதற்காக அமெரிக்க கருவூல அதிகாரிகளுடன் அடுத்த வாரம் நாடு திரும்பவுள்ளார்.மேலும் அரசாங்கத்தின் வரி கட்டமைப்பு மற்றும் வரி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாட கடந்த வாரம் கொழும்பிற்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, அதிகாரிகளுடனான கலந்துரையாடலை முடித்துக்கொண்டு நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது.இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்பக் குழு வார இறுதியில் நாட்டிற்கு வரவுள்ளதுடன், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கை கோரும் உதவியை இறுதி செய்யும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாளை முதல் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளது.