ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் சுரேஷ் சாலேவிற்கும் தொடர்பா..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் அனைத்து கருத்துக்களும் உண்மையானவை அல்ல என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று(10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் அனைத்து கருத்துக்களும் உண்மையானவை அல்ல. சில நேரம் அவர்கள் தவறான பொய்களை கொண்டு வருவார்கள்.

தங்கள் அரசியல் நலன்களுக்காக உண்மையை மறைப்பதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். பின்னர் பார்க்கும்போது அது உண்மைக்கு புறம்பானதாக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் யாரோ ஒருவர் பேசியதைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் முன்னாள் அமைச்சரும் இது தொடர்பில் பேசினார்கள். ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பது தவறு என்று நான் நினைக்கின்றேன்” - என்றார்.