ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக காய் நகர்த்தும் ஐ.தே.க.!!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிப்படுத்திய தகவல் குறித்து புதிய விசாரணை ஒன்றினை நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிகொதாவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குழுவொன்றின் மூலம் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

தாக்குதல்கள் இடம்பெற முன்னரே புலனாய்வு பிரிவினர் அறிந்திருந்த தகவல்களை பாதுகாப்பு சபையில் தெரிவிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்ததாக ஷானி அபேசேகர கூறியிருந்தார்.

இருப்பினும் அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தமையை வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டிருந்தார்.

அத்தோடு புலனாய்வு பிரிவினர் அறிந்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

ஆகவே இவ்வாறு தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நடவடிக்கையை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வஜிர அபேவர்தன கேட்டுக்கொண்டார்.