குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் அனுப்பப்பட்ட குரல் பதிவுகள்: எதிர்கால தாக்குதல் தொடர்பில் சபையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றது இறுதியானது ஒன்றல்ல என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் போது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் தற்கொலை குண்டுதாரிகள் தங்களது உறவினர்களுக்கு குரல் பதிவுகள் அனுப்பி வைத்து அறிவித்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறுப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்த முன்னர் தற்கொலை குண்டுதாரிகள் 2021.04.20 ஆம் திகதி கல்கிஸ்சை பகுதியில் ஒன்றிணைந்து உறுதிப்பிரமாணத்தை பதிவு செய்து தாங்கள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினோம் என்பதற்கான 10 காரணிகளை குறிப்பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இலங்கையில் வாழ்ந்த ஏனைய மதத்தவர்கள் அல்லா கடவுளை அவமதித்தமை, குளியாபிட்டி பகுதியில் பன்றியுடன் ஒன்றிணைத்து அல்லாவை அவமதிக்கும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை, ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தினரையும் அவமதித்தமை, நபிகள் நாயகத்தை அவமதித்தமை, திருக்குரான் எரிக்கப்பட்டமை - கிழித்தெறிக்கப்பட்டமை, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை அவர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டமை, முஸ்லிம் பெண்கள் புலனாய்வு விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டமை ஆகிய காரணிகளால் தாங்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறியதாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்வர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்னர் காணொளி வெளியிட்டுள்ளார்கள்.

அந்த காணொளி இறுவட்டை நான் சபைக்கு சமர்ப்பித்துள்ளேன். நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையிலும், மேற்குலகத்தில் முஸ்லிம் கொலை செய்து விட்டு இலங்கையில் விடுமுறையை கழிக்கும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதலை தாம் நடத்துவதாக தற்கொலை குண்டுதாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தாக்குதல்தாரிகள் குண்டுதாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் தமது உறவினர்களுக்கு குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார்கள்.

கடவுளின் மார்க்கத்துக்கு அமையவே உயிர், உடல் மற்றும் சொத்துக்களை தாம் தியாகம் செய்வதாகவும் இதனால் தமது குடும்பத்தாரும், இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்பதை அறிவோம். இருப்பினும் கடவுளின் மார்க்கத்தை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் ஒரு சில ஆற்றிய உரை கவலைக்குரியது.

தேசிய பாதுகாப்பையும், புலனாய்வு பிரிவினையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றது இறுதியானது ஒன்றல்ல என்று குறிப்பிட முடியாது. அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் நாட்டிலும் உள்ளார்கள். நாட்டுக்கு வெளியிலும் உள்ளார்கள்.

ஆகவே புலனாய்வு பிரிவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்  என குறிப்பிட்டார்.