ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி வலியுறுத்தினார்.

 

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,


 மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதோடு, அவரைப் போன்ற பல விசாரணை அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அந்த விசாரணைகளுக்கு பாரிய தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டன.


அதன் பின்னர் அந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுமில்லை. எனினும் அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மீண்டும் அந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த சில காரணிகள், சில தெளிவற்ற காரணிகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.


கால வரையறை காரணமாக சில காரணிகள் குறித்த ஆழமாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாமல் போனதாக அந்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு புதிய விடயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அவற்றில் ஒன்று செனல் 4 செய்தி சேவையின் ஆவணக் காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட காரணிகளாகும்.


முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் காணப்படுகிறது.' எனக் குறிப்பிட்டிருந்தமையும் மீள விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு காரணியாகும்.


இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மாத்திரமின்றி நாட்டில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன.


எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்தவகையிலும் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.


செனல் 4 செய்தி சேவையில் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்திய அசாத் மௌலானா தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. அவரை நாட்டுக்கு அழைத்துவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய காரணியல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எதற்காக யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகும் என்றார்.