சனல் 4 வெளிக்கொண்டு வந்த விடயங்களை விட இன்னும் பல விடயங்கள் வெளிவரத் தொடங்கும்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் என்பது சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் கூட்டிணைந்து இயங்க விருப்பதால் இனிமேல் அந்த தனியார் பல்கலைக் கழகத்தின் பெயர் எஸ்.எல்.ரீ - மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும்மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஏறாவூரில்  இன்று (21.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஏறாவூர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாறுஸ்ஸலாம் அலவலக பொறுப்பாளரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சி. அஸனார் ஜே.பி தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது.

நிகழ்வில் அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஹிஸ்புல்லாஹ், நடைபெற்ற மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை என்பதைத்தான் புலனாய்வு அறிக்கைகளும் சனல் 4 வெளியிட்ட விடயங்களும் வெளிக்கொண்டு வந்துள்ளன.

இந்த விடயத்தை வெறுமனே விசாரணை ஆணைக்குழுக்களோடு மாத்திரம் விட்டு விடாமல் அரசாங்கம் புலனாய்வுப் பிரிவைக் கொண்டும் தேவையேற்படுமிடத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றும் விசாரிக்க வேண்டும்.

இதிலே யார் யார் எந்த நோக்கத்திற்காகச் சம்பந்தப்பட்டிருந்தார்கள், சனல் 4 இல் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்கள் உண்மையா என்பதெல்லாம் விசாரணையில் கண்டறியப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை.

சனல் 4 இல் சொல்லப்பட்டதை விட இன்னும் அம்பலமாகாத முக்கியமான பல விடயங்கள் வெளியில் இருக்கக் கூடும். இனி அவை வெளிவரத் தொடங்கும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பால் நாடு பல பாதிப்புக்களை எதிர்கொண்டது. மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் மூடப்பட்டுக் கிடந்ததால் நாட்டுக்கு வரவேண்டியிருந்த 100 மில்லியன் டொலர்கள் வருமானம் இல்லாமல் போய் விட்டது.

எஸ்எல்ரி –மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் தற்போதைக்கு சுமார் 3000 தொடக்கம் 4000 ஆயிரம் மாணவர்கள் தமது துறைசார்ந்த பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வசதி உள்ளது.

அதேவேளை அதன் மூன்றாம் கட்ட நிருமாணப் பணிகளும் முடிவடைந்த பின்னர் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் கற்கக் கூடிய ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக அது திகழும்.

இது இலங்கையின் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். அதேவேளை நடைமுறையில் ஒப்பீட்டளவில் அரைவாசிக் கட்டணத்துடனேயே மாணவர்கள் தமது பட்டப்படிப்பை முடித்துக் கொள்ளும் சலுகை இங்கே வழங்கப்படும்.

அடுத்தாண்டு ஜனவரியில் கற்கைகள் ஆரம்பிக்கப்படும். இலங்கையின் எந்தவொரு பல்கலைக் கழகத்திலும் இல்லாத வசதிகளுடன் நாட்டின் அதியுயர் சிறந்த பிரஜைகளை உருவாக்கும் ஒழுக்கமான கல்வியும் இங்கே போதிக்கப்படும்” என்றார்.

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஜெயந்தியாயவில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகம் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

அது ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் படையினரால் கையகப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இவ்விடயம் தொடர்பாக தொடராக இடம்பெற்ற முன்னெடுப்புகளின் பிரகாரம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அதன் ஸ்தாபகரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய புதன்கிழமை (20.09.2023) மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் அதன் நிருவாகத்திடம் படையினரால் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் உட்பட பிரதான நகரங்களில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் விடுவிக்கப்பட்டதை வரவேற்று பதாதைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.