பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரான பெண் கைது

பிரபல பாதாள உலக பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு சலிந்து'வின் உதவியாளரான பெண் ஒருவர் நேற்று (18) வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், டுபாயில் உள்ள 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்சிக்க குணரத்னவின் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்ததாக கூறப்படும் அசித என்பவரின் மைத்துனி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 'பட்டா' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் குறித்த பெண், 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணத்துடன் பாணந்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 'பட்டா' க்கு தற்போது மேலும் இரண்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவரது சகோதரி மற்றும் தந்தை போதைப்பொருள் குற்றச்சாட்டில் தற்போது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.