சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் வைத்தியர்களின் போராட்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். குறித்த வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணிக்கு முடிவடையும். 

இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதியாக உள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார். 

இதேவேளை வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியிலுள்ள பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே  சுகாதார அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ  அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  விஜயம் செய்திருந்தார்.


இதன்போது பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் துணை பணிப்பாளர் உள்ளிட்ட  வைத்தியக்குழுவிடம் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.