"நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என தொனிப்படும் துண்டுப்பிரசுரங்களை நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகித்த பொதுமகனுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முரண்பட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதனால், நிகழ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூரில் உள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றபோது குறித்த சம்பவம் நடைபெற்றது.
நினைவேந்தல் நிறைவடைந்தபோது அங்கு நின்ற ஒருவர் துண்டுப்பிரசுரங்களை அங்கிருந்தவர்கள் மத்தியில் விநியோகித்தார்.
குறித்த துண்டுப் பிரசுரத்தில்,
எங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் எத்தனையோ போராளிகள் ஆயுத வழியிலும், அகிம்சை வழியிலும், தன்னைத்தானே வெடித்துச் சிதறியும் போராடி மாவீர்கள் ஆனார்கள். இவர்கள் இன்றும் எங்களுக்கு தெய்வங்களே. இந்த தெய்வங்களை நாம் வணங்குவதற்கு யாரும் தடைசெய்யவோ, அரசியல் ஆக்கவோ கூடாது.
இவ் வணக்க நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதோடு. தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம் - என குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தவரை அச்சுறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் தாக்க முற்பட்ட நிலையில் , அங்கிருந்த ஏனையோர் அவர்களை தடுத்து, துண்டு பிரசுரம் விநியோகித்தவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
குறித்த சம்பவத்தினால் நினைவிடத்தில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.