ஐக்கியதேசிய கட்சியில் வெடித்தது முரண்பாடு


அதிபர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளக முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(10) குளியாப்பிட்டியவில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் இந்த முரண்பாடுகள் வெளிப்படையாக காணப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

இதன்படி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சப்ரகமுவ மாகாண ஆளுநருமான நவீன் திஸாநாயக்கவின் பெயர் பேச்சாளர் பட்டியலில் இருந்து வெட்டப்பட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று @officialunp சந்திப்பிலிருந்து நான் பணிவுடன் என்னை விலக்கிக்கொண்டேன், ஏனெனில் எனக்கு ஒரு பேச்சு வாக்குறுதி அளிக்கப்பட்டது, பின்னர் எனது பெயர் வெட்டப்பட்டதை அறிந்தேன்.

@RW_UNP சார்பாக இந்த முடிவுகளை எடுப்பது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் கட்சிக்கு ஆதரவாக நிற்பேன், ஆனால் ஒருவரின் கௌரவம் பாதிக்கப்படக்கூடாது” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட பேரணியில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.