தினேஸ் ஷாப்டரின் படுகொலை - மனைவியிடம் தொடர் விசாரணை..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்


கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு முக்கிய சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம் விசாரணையாளர்கள் 3ஆவது தடவையாகவும் அவரது வீட்டில் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் சனிக்கிழமை 24 இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இலக்கம் 39 , பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தினேஷ் ஷாப்டர் 16 வங்கிக் கணக்குகள் இருவருக்கு சொந்தமானவை எனவும் கொடுக்கல் வாங்கல், வர்த்தக நடவடிக்கைகளின் பிரச்சினைகள், கொலைக்கு காரணமாக கிடைக்கலாம் என்ற ரீதியில் இந்த வழங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15 ஆம் திகதி காலை முதல் தினேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் தன்னுடன் எதனையும் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைது செய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது