ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலில் ஜனாதிபதிக்கான பொதுத்தளத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என பசில் ராஜபக்ச பிடிவாதமாகயிருந்ததால் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நிறுத்துவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இருவரையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் தொடர்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சியின் 92 உறுப்பினர்கள் சந்திப்பு நடத்தியிருந்ததாகவும், இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கட்சியுடன் இணைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என அறிவிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவே கூறினார் என சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது சில அமைச்சர்களும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக கூறிய போதிலும், பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தமது கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார்.
கட்சியின் வேட்பாளரைத் தவிர்ந்த வேறு ஒருவருக்கு ஆதரவளித்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவினர் நிச்சயம் ரணிலை ஆதரிப்பார்கள் எனவும் இல்லையேல் இன்னுமொரு தேர்தல் வந்தால் ராஜபக்சாக்களின் மொட்டு கட்சி அழிந்துவிடும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.