ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படும் இலங்கை வீரர்: இந்திய வர்ணனையாளர் ஆரூடம்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படலாம் என இந்திய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீரின் பார்வை இந்த அடுத்த சுற்றில் மதுஷங்கா மீது வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே மதுஷங்கவுக்கு அடுத்த தொடர் ஒரு களமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024 மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் திகதி துபாயில் நடைபெற உள்ளது.முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வட்டார தகவல்களின் படி , ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர் எனவும் அதில் 830 இந்திய வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும், இலங்கை அணியின் சகலதுறை வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாவிற்கு தேர்வு செய்த வீரர்களின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷ பத்திரனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.