விடுதலை புலிகள் சரணடைந்தார்களா..! மீண்டும் இராணுவம் வெளியிட்ட தகவல்


இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த மேன்முறையீடானது நேற்று (3) தகவலறியும் ஆணைக்குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2019 ஆம் ஆண்டு குறித்த ஊடகவியலாளர் சரணடைந்த விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் விண்ணப்பித்த போது ," எங்களிடம் விடுதலை புலிகள் சரணடையவில்லை" என அந்த விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்தது.

இது தொடர்பான மேன்முறையீடே மூன்று வருடங்களுக்கு பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள் அவர்கள் விடுதலை புலிகளா? பொது மக்களா? என்பது எமக்கு தெரியாது.

நாம் பொறுப்பேற்றுக்கொண்ட போது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை நாம் பேருந்து ஏற்றி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தோம்.

அதன் பின் மறுவாழ்வு பணியகம் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது என சாட்சியம் வழங்கியுள்ளது.