மகிந்த கலந்து கொண்டாரா இல்லையா - பந்துல, நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டாரா, இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ச பதவியில் இருந்து விலகியதன் பின் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மகிந்த ராஜபக்ச அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் ஆச்சரியமில்லை: கோட்டாபய ரணில் ஆட்சி தொடர்பிலும் தகவல் 

அத்துடன் மகிந்த சுயவிருப்பின் பேரிலேயே பதவி விலகியதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடமே பெரும்பான்மை பலம் தொடர்ந்தும் இருப்பதால், பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை எனவும் கூறியுள்ளார்.