சுதந்திர தமிழீழம்..! புலம் பெயர் தமிழருக்கும் சந்தர்ப்பம்: சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்


சுதந்திர தமிழீழம் வேண்டுமா இல்லையா என்ற சந்தர்ப்பத்திற்கு புலம்பெயர் மக்களும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் வாக்களிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

மேலும்,போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதியைக் கோரி ஈழத்தமிழினம் போராடி வருகிறது. முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவடைந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஜெனிவாவில் எங்கள் பிரச்சனை இருந்து கொண்டிருக்கின்றது, தமிழ் தரப்புகள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரச படைகளினால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை உட்பட்ட குற்றங்களுக்காக ஈடு செய்யக்கூடிய நீதியை பெறக்கூடிய விதத்திலும், இனப் படுகொலை மீண்டும் இடம்பெறாமல் இருக்க மீள நிகழாமை அடிப்படையிலும், ஐநா சபையின் கண்காணிப்பில் வடக்கு,கிழக்கு மாநிலத்தில் பொதுசன வாக்கெடுப்பை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாலும் பொதுசன வாக்கெடுப்பை கோருவதை தவிர்த்து வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை பொதுவெளியில் இந்த கோரிக்கையை முன் வைக்கவில்லை.ரெலோ, புளொட் ஆகியன எங்களுடன் இணைந்து இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை.

இலங்கைக்குள் ஒரு போதும் அரசியல் தீர்வு கிடையாது. அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக கூறினாலும் ஒற்றையாட்சியை சுற்றிச் சுற்றி தான் இருக்குமே ஒழிய எங்களை நாங்கள் ஆளக்கூடிய ஒரு கௌரவமான தீர்வு கிடைக்காது.

ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழ் தரப்புகள் பொது உடன்பாட்டுக்கு வந்து பொதுசன வாக்கெடுப்பை முன்வைப்பதன் ஊடாகவே அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர முடியும். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் தொப்புள் கொடி உறவுகளான தாய் தமிழக மக்களும் இதனை நோக்கி நகர வேண்டும்.

இதனை மக்கள் இயக்கமாக வலியுறுத்தி மாவட்டம் மாவட்டமாக பேரணியாக செல்லக்கூடிய விதத்தில் செய்து முடிக்க வேண்டும் கட்சி பேதங்களை கடந்து அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருந்து பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

குவாட் அமைப்பில் உள்ள அமெரிக்கா இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனா நடவடிக்கையை எதிர்த்து ஈழத் தமிழர்கள் பிரச்சனையை முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டும் என்றார்.