தேவாலயத்துக்கு அருகில் புதையல் தோண்டி பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி : மாந்திரீகரும் கைது



அநுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள காணியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் கொழும்பு பிரதேச பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட எட்டு பேரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராத புரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள 'தங்க தேவாலயம்' அருகிலுள்ள காணியில் ஒரு குழு புதையல் தோண்டி வருவதாக அநுராதபுரம் பொலிஸாருக்கு கடந்த 13ஆம் திகதி தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஒரு பெண் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் பதுளை, மாலிகதென்ன, பதவி ஸ்ரீபுர, கிரந்துருகோட்டே, வரகாபொல மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட குழுவில் இருந்த பெண்ணை விசாரித்த போது, அவர் கொழும்பு பகுதியிலுள்ள ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மனைவி என்பது தெரியவந்தது.

தனது வீட்டைப் பாதுகாக்க தேவையான மாந்திரீக நடவடிக்கைக்காக குறித்த இடத்திற்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட குழுவில் ஒரு மாந்திரீகரும் இருந் ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது அக்குழுவிடம் இருந்து மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட மண்ணை தோண்ட பயன்படும் ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.