பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதன் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாங்கமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளது.
அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது 20 வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது.
ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது என்றார்.
இதேநேரம் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் முன்னேற்ற அறிக்கையை பார்க்கும் போது அதில் வெற்றி கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்தின் 100 நாட்கள் முக்கியம். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த பெருந்தொகையான மக்கள் இந்த நாட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அதன்படி, அரசாங்கத்தின் 100 நாட்களின் முன்னேற்ற அறிக்கையைப் பார்த்தால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் சில அமைச்சர்களின் பேச்சிலிருந்து, அவர்கள் இந்த 100 நாட்கள் திருப்தி அடையவில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் 100 நாள் முன்னேற்ற அறிக்கையை பார்த்தால், 100 நாள் முன்னேற்ற அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை, குறிப்பாக குறுகிய காலத்தில் அரசு நிறைவேற்றவில்லை என்பதையே அறிய முடிகிறது.
100 நாட்களை பின்னோக்கிப் பார்க்கும் போது, 100 நாள் பயணத்தை அரசு வெற்றியடையச் செய்யவில்லை என்பதைத் தெளிவாக காணமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமது பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,
தாம் ஏற்கனவே கூறிய பொய்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து தேர்தலை நடத்துவதுவதா இல்லையா என்பதை மதிப்பாய்வு செய்வதற்காக மக்கள் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளார்.
ஊழல், மோசடியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே, மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டுக்கும் பெரும்பான்மையை வழங்கினர்.
ஆனால் இன்றும் ராஜபக்ஷர்கள் மீது குற்றஞ்சுமத்துவதும், குறை கூறுவதும் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தைரியம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காக மீண்டும் மக்கள் மத்தியில் சென்று பொய்களைக் கூற ஆரம்பித்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.