GSP+ சலுகையை இடைநிறுத்த தீர்மானம் - ரணில் அரசுக்கு மற்றுமொரு நெருக்கடி

தற்போது பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கைக்கு ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் ஓரளவு ஆறுதலைத் தருகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி எஸ்பி பிளஸ் வரிச்சலுகையே ஆகும். எனினும் இதற்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அபாய சங்கு ஊதியுள்ளார் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.

அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகையை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு 500க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், எனினும் இந்த பிரேரணை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பிரேரணையை நடைமுறைப்படுத்தினால் இலங்கையின் ஆடைத் தொழிலில் 6 தொடக்கம் 7 ​​இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை முடிவுகள் ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.