இந்தியாவினால் வழங்கப்படும் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடிவு !

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளைச் செய்துள்ளதாகவும், எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆராய ​​இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கையின் வடமுனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்றும் பெரிய கப்பல்கள் தங்கும் வகையில் இதை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.