பல தசாப்தங்களாக கோலோச்சிய ராஜபக்சக்கள் - இன்று துகள்களாக சிதறடிக்கப்பட்ட நிலையில்!


சிறிலங்கா அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக ராஜபக்ச குடும்பம் பிரதான முகாமாகக் காணப்பட்டது. இவர்களே சிறிலங்கா சுதந்திர கட்சியாகவும், பொதுஜன பெரமுனவாகவும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றினர்.

இவ்வாறு நாட்டை பல தசாப்தங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜபக்சாக்கள் இன்று காணாமல் போயுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதேவேளை மீண்டுமொரு ராஜபக்ச முகாம் நாட்டில் ஆட்சியமைக்க முடியாதளவிற்கு பொதுஜன பெரமுன சிதறிப்போயுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பி.யிலிருந்து ஓரிருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தால் போதும் என்று மக்கள் எண்ணினர்.

ஆனால் இன்று ஆட்சியை ஜே.வி.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனைக் கூறும் மக்கள் நினைத்தால் எம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

74 ஆண்டுகளாக நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்ச்சியை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே தான் ஜே.வி.பி.யிடம் ஆட்சியைக் கையளித்துப் பார்ப்போம் என்று கூறுகின்றனர்.

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகள் வேலைத்திட்டங்களின் அடிப்படையிலும் , கொள்கைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. மாறாக தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.

அதற்கமையவே சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச என அவர்களைச் சுற்றியே கட்சி காணப்பட்டது. மஹிந்த , கோட்டாபய மற்றும் பசில் ஆகிய மூவரைச் சுற்றியே ராஜபக்ச முகாம் காணப்பட்டது.

ஆனால் இன்று கோட்டாபய ராஜபக்சவிற்கு வீதியில் இறங்க முடியாது. மஹிந்த ராஜபக்ச வீதியில் இறங்கினாலும் அவரால் நடக்க முடியாது. பசில் ராஜபக்ச நாட்டிலேயே இல்லை. தற்போது முழு ராஜபக்ச முகாமும் சிதறிப்போயுள்ளது.

நாடாளுமன்றத்தில் ராஜபக்ச முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர் ஒருவருடன் உரையாடும் போது, ‘கட்சி பிளவடைந்துள்ளதைப் போன்றுள்ளதல்லவா?’ என்று கேட்ட போது , ‘கட்சி பிளவடையவில்லை. மாறாக தூக்கி தரையில் எறிந்ததைப் போன்று துகள்களாக சிதறியுள்ளது’என்று அவர் கூறினார்.

ஆகவே மீண்டுமொரு முறை சிறிலங்காவில் ராஜபக் முகாமினர் ஆட்சியை அமைக்க முடியாதளவிற்கு ராஜபக்ச முகாம் சிதறிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.