காதலனைக் காணவந்த பிரித்தானிய தமிழ் பெண் சடலமாக..! காவல்துறை வெளியிட்ட பின்னணி


பிரித்தானிய குடியுரிமை பெற்ற இளம் தமிழ் பெண் ஒருவர் கொழும்பின் புறநகரிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து திரும்புவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக குறித்த பெண் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை - அல்விஸ் மாவத்தையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து 27 வயதான இளம் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள கல்கிஸ்சை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் இலங்கைக்கு வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்த பெண் கடந்த 6 மாதகாலமாக தனது 29 வயதான காதலுடன் குறித்த தொடர்மாடியில் தங்கியிருந்துள்ளார் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காதலனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

மது அருந்திய பின்னர் தாம் உறங்கச் சென்றதாகவும் அதன்பின்னர் காதலியிடம் இருந்து எந்தவொரு பதிலும் வராத நிலையில் அவரை தேடிய போது சடலத்தை கண்டதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற கல்கிஸ்சை பதில் நீதவான் ரத்ன கமகே, நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இன்று இடம்பெறும் பிரேதப் பரிசோதனைகளின் பின்னரே குறித்த பெண்ணின் உயிரிழப்பு தற்கொலையா கொலையா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.