பேராதனை வைத்தியசாலையில் யுவதிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய விதம் குறித்து வெளியான தகவல்



ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்தை குறிப்பிட்டுள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அகில இலங்கை தாதியர் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பி.மடிவத்தை குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

யுவதிக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் மருந்தை காட்டிய எஸ்.பி.மடிவத்தை இது தொடர்பில் கூறுகையில், இதில் 10 மி.லீ. மருந்தை கரைத்து நோயாளிக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டின் வைத்தியசாலை அமைப்பில் தேவையான 10 மி.லீ சிரிஞ்சர்கள் இல்லை. எனவே குறித்த செவிலியர் அந்த மருந்தை இரண்டு 5சிசி சிரிஞ்சர்களில் கரைத்து கொடுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவே எமக்கு தகவல் கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உயிரிழந்த யுவதியின் சடலம் நேற்று (12.07.2023) இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.