மைத்திரிபால சிறிசேனவினால் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு தடை உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால்  முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(21) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த தடை உத்தரவு ஒக்டோபர் 5ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவினால் செப்டெம்பர் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் விளக்கமளிக்குமாறு கோரியுள்ளார்.

எதேச்சதிகாரமான முறையில் அவ்வாறானதொரு கடிதத்தை வெளியிடுவதற்கு கட்சியின் அரசியலமைப்பின் மூலம் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் இல்லை என அவர் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.