ஜனாதிபதி அநுர பின்னணியில் ஆபத்தான பயங்கரவாதக் குழு : தேரர் எச்சரிக்கை

இலங்கையில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதக் குழு இன்னும் அநுரகுமாரவுடன் உள்ளது.  அதனைக் கூறுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா? என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கத்தில் பலர் முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.
 இலங்கையில் செயற்படும் பல இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கின்றன.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே நாங்கள் பேராயர் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினோம், சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து அவருக்கு எச்சரித்தோம்." ஆனால், அவர் எங்கள் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற வகையில், தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் இருந்தது,
ஆனால் நாட்டின் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை. உளவுத்துறை நிறுவனங்களால் கூட அணுக முடியாத பல இரகசிய தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம்.

இந்தத் தாக்குதல் குறித்து 2014 முதல் நான் எச்சரித்து வருகிறேன். அந்த நேரத்தில், நான் சம்பந்தப்பட்ட அரசாங்கத் தலைவர்களுக்கு 17 கடிதங்களை அனுப்பினேன். நாட்டில் வேறு பல தீவிரவாதக் குழுக்கள் தோன்றுவது குறித்தும் நான் கவலை தெரிவித்தேன்.

கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி மூலம், தொடர்ச்சியான மத தீவிரவாத குழுக்கள் பற்றிய விரிவான தகவல்களை நாங்கள் கண்டுபிடித்தோம்.
அரசாங்கத்தின் எந்த உதவியும் இல்லாமல், இந்தத் தகவல்கள் அனைத்தையும் நாங்கள் சுயாதீனமாகச் சேகரித்தோம். நாட்டின் இன ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நலன்களுக்காக நாங்கள் அதைச் செய்தோம்.

"நாங்கள் இறுதியாக அறிக்கையை சமர்ப்பித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்றார்.