உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரான டேன் பிரியசாத், நேற்று முன்தினம் (22) இரவு தனது மனைவியின் வீட்டுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்
அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து டேன் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் பொலிஸ் தடுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு பெண் டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.
இதேநேரம் டேன் பிரியசாத்தின் கொலையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளளனர்.
நாட்டில் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவங்களின் பின்னால் பல்வேறு குற்றக்கும்பல்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவங்களில் பல்வேறு குற்றக் கும்பல்களை சேர்ந்த பலர் உள்ளடங்குவதுடன்,சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவிகள் சிலரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரையில் இடம்பெற்றுள்ள 37 துப்பாக்கிச் சூட்டு
சம்பவங்களில் 23 சம்பவவங்கள் பாதாள உலக குழுக்களினால் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேபோன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 14 சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளன. அத்துடன் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு முயற்சிகள்துப்பாக்கிகள் இயங்காமையினால் தடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.